எனது  காதலுக்கு இளையராஜா இசையமைத்தார் என்று சொன்னால் இப்போது யாரும் நம்பப் போவதில்லை. எனக்கும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காதல் என்பது அத்தி பூத்தாற் போல் நடந்தெய்தும் விடயம். இளையராஜாவின் இசை என்பதும் கேட்டு வாங்கும் வரம் போன்ற வரப்பிரசாதம். உங்களுக்கு அவரின் இசை கிடைக்கவில்லையாயின் நீங்கள்அனுபவித்து காதலித்திருக்கவில்லை     என்பது அர்த்தமாகும்.

இளமை என்பது எரியும் நெருப்பு போன்றது. அதில் பதின்ம வயதுகள் பற்றிக் கொள்ளும் கங்குகளுக்கு ஒப்பானவை. நெருப்பும், கங்குகளும் நெருங்கி இருந்தால் பற்றிக்கொள்ளும். இது தெரியாதா உங்களுக்கு?

தொழுவது சுகமா? வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும் விருந்து தான் சுகமா?
பழகிய காதலெண்ணி பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகம் என்பேன் யான்! அறிந்தவர் அறிவாராக !        -கண்ணதாசன்-

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்
தேனீர் கடையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
கடைசிப் பேரூந்தையும் விட்டு விட்டு
கேட்டுக் கொண்டிருக்கின்றது காதல்.      -நா.முத்துக்குமார்-

என்னைப் பற்றி  சொல்வதற்கு  ஒன்றுமில்லை. இங்கு  காதல்  சொல்வதுதான் காரியம்: கனத்த  ஞாபகம். என்  பெயரைச்  சொன்னாலே  புரிந்து  கொள்வது  அவளாகத்தான்  இருக்கும். மற்றவர்களுக்கு  ஆருத்ராவாக  இருந்து விட்டுப்   போகட்டும்.  பெயரில்  என்ன  இருக்கின்றது?  ஆருத்ராவிடம்  கண்ணில்  கண்ணீரும்,  கனவுகளும்  மீதமிருந்தன.

ஆருத்ராவாகிய நான் திருவைக் கொண்டிருக்கவில்லை. செல்வச் செழிப்பில்லாத நடைமுறைக்கும்,சராசரிக்கும் இடையில் கனவு காணும் கல்லூரியின் கடைமாணவன். பாடசாலை நாட்களை கூறுமிடத்து பாடசாலைப் பெயரும் சொல்லியாக வேண்டும். சாவகச்சேரி இந்துக்கல்லூரி. எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு புதுமுக வகுப்பு. பதின்ம வயது எனக்கு. காதலின் வீரியமும் விஸ்தீரணமும் தெரியாத வயது. இரத்த அணுக்களில் கனவும் காட்சிகளும் குடிகொண்டிருந்த காலம். உண்மையிலேயே நீண்ட கனவுகளை நெடுதுயிலின்றி பகலில் காணும் பாக்கியம் பெற்ற காலங்கள். உங்களுக்கு சொல்வதனால் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. இளையராஜா இசையமைத்ததை கூறுவதற்கு இவையெல்லாம் தேவைப்படுகின்றன.

காதல் வயப்படுதல் பதின்மவயதின் குளறுபடிகள். அவள் எங்கள் வீடு கடந்து தான் பாடசாலை சென்றாக வேண்டும். எனது “சாவகச்சேரியும் சைக்கிள்களும“ பதிவில் அவள் சைக்கிள்கள் வைத்திருந்த காலத்திற்கு முந்திய காலம். கல்வயலில் இருந்து நடந்து செல்லும் அவளை, எங்கள் வீட்டை பலமுறை கடந்து செல்கையிலும் கவனிக்காத காலம் இருந்திருக்கிறது. ஏன் கவனிக்கவில்லை என்று காலத்திடம் பலமுறை கேட்டிருக்கிறேன். காலம் மௌனமாக இருந்து தொலைத்தது. அதற்கும் பதில் தெரியவில்லை. எனக்கும் பதில் புரியவில்லை.

நீ பார்த்த நிலவும் நான் பார்த்த நிலவும்
நிலவாக மட்டுமே இருந்தது.
நாம் பார்த்த நிலவிற்கு நினைவு என்று பெயர்.

நினைவுகளைக் கைப்பிடித்து கனவுகளைக் காலம் முழுக்க விதைத்த காலம். அழப்பிடித்தால் நிறுத்திக் கொள்ளமுடியாத துயரது.

ஒரு வெள்ளிக்கிழமையின் மாலைநேரம் என்று நினைவு. கடவுள் வழிபாடு ஆன்மீகம் என்று தெரியாத வயதில் அம்மாவின் அழைப்பிற்கு செவிசாய்த்து பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அந்த கோவில் மிக அழகானது உன்னைப் போலவே. முன்னிருந்த வயற்பரப்பில் வீசும் காற்று கோயிலுக்கு உட்புகுதல் உன்னையும் என்னையும் தாலாட்டிச் செல்வதற்கே. காற்று இன்னொரு கனத்த மௌனம்.

நீ இரட்டை சடையுடன் இழுத்து வாரிய கூந்தலுடன் அதீத திருநீற்றுப் பூச்சுடன் காட்சியளித்தாய். கருவறை கடவுளை விட எழில் சூழ் அழகு. சாமி பார்த்து கும்பிடுதல் உன்னை தரிசித்தலுக்கு ஒப்பானதாக நினைவு தடுக்கிக் கொள்கிறது.

கோவில் கைங்கர்யங்களில் ஈடுபட்டிருந்த அர்ச்சகரின் கண்ணசைவிற்கு இணங்க மணியடித்தலுக்காக கைவைத்த வேளை, அதை உனக்கான சைகைக்குறிப்பாக ஏற்று நீயும் விரைந்து கோவில் மணியில் கைவைத்த போது சட்டென கைகளிலும் கண்களிலும் மின்சாரம். அன்று தான் நானுன்னை அதீதமாய் கவனித்ததாய் கொள்ள வேண்டும்.

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்
தக தக தகதோம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே.    (இசை கேட்க அழுத்துக.) 

பின்னணி இசைக் கோப்புகளுடன் ஆரவாரமான இசையது. என் கண்ணும் நின் கண்ணும் நிலை எடுத்துக் கொண்டன. மான் மருண்ட பார்வை உன்னது. புலி பதுங்கிய பார்வை என்னது. அன்றைய பொழுது அத்தோடு கழிந்தது. ஆரவாரமான இசைக் கோர்ப்புடன் அனிச்சையாகப் பாடல் தெருவெங்கும் விரவிப் பாய்ந்தது. இசைஞானியின் பிரத்தியேக இசை எனக்களிக்கப்பட்ட முதல் நாளாக அமைந்தது. அதன் பின்னரான நாட்கள் என் கவனிப்பும், உன் கவனிப்பும் கவனிப்பாரற்று காலம் நகர்த்திச் சென்றது. நீ கவனிப்பதாகவே எனக்கான கற்பனைகள் என்னில் சொல்லிச்சென்றன. நீ இல்லை என்று சிலவேளை மறுக்கக் கூடும்.

இனி மேற்கொண்டு தொடர்வதற்கு முதல் நீ எனக்காக அளித்த விம்பத்தை மற்றவர்கள் கண்களுக்கு கொண்டுவந்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு வாய்த்த பொழுதில் எதைக் கொண்டு உன்னை முன்னிறுத்துவது. எனக்கு எல்லாம் இளையராஜாவாகவே வாய்த்திருக்கின்றது.

நீண்ட வகிடெடுத்த கூந்தல், மல்லிகைச்சரம், நாணிய விழிகள், கூர்நாசி, தாவணிக்கனவுகள் ,கரங்களில் இறப்பர் வளையங்கள், ஒற்றைச்செயின்…….. விகடனின் அண்மைய வரவான ஓவியர் இளையராஜாவின் ஓவியம் உன்னை தூரிகைபார்த்து வரைந்ததாக சொல்ல வேண்டும்.

நீ சிரிக்கும் போது பௌர்ணமிநிலவு அத்தனை திசையும் உதிக்கும்.
நீ மல்லிகைப் பூவை சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.

அடுத்த வரியில் விழியில் என்பதை விடுத்து பிழியில் என்று வைரமுத்து கூறுவது ஆர்மோனியப்பெட்டியின் கட்டைகளை.

இசை பெருவெள்ளம் எனக்குள் விரவிப் பாய்ந்தது. இளையராஜவின் இசையாய், இளையராஜாவின் ஓவியமாய் எனக்குள் பரவி எனக்குள் விரவி கங்குகள் நெருப்பில் பற்றிக் கொண்டன. காதல் என்று பெயர். அவள் என்பது பெயர்ச்சொல்.

காதல் திடீரென்று பார்த்த கணத்தில் ஒருவர் மேல் ஏன் வரவேண்டும்? இவள் எனக்கானவள் என்று மனம் எப்படி இட்டுக்கட்டிக் கொள்கின்றது. முழுதாக அறிந்து கொள்ள முதலே கண்கள் சிக்கி சின்னாபின்னப்பட்டு போவது எதனால்? அறிவியல் தெரியாதவற்றிற்கு விடைதேடி அலைகின்றது. காதலிக்கும் கணத்தில் எல்லாம் அறிவை விட உணர்வுகள் உன்னதமானவை. கல்யாணியை பிடிக்கிறது. காமாட்சியை பிடிப்பதில்லை. இதற்கும் விஞ்ஞானம் பதில் சொல்கின்றது. இயற்கை நம்மை ஒரு வகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கின்றது. நம்; ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்தியேக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம், தனிப்பட்ட முகம், சுருள்முடி,அழுத்தமான உதடு ……தனிப்பட்ட…….. தனிப்பட்ட……. இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைக்காலத்தில் மனதில் உருவாகின்றது. அந்த முகத்தை சந்திக்கும் போது ஒரே சொடக்கில் காதல்….. சுஜாதாவின் வரிகள்.

அவள் எங்கள் வீதியால் பயணிப்பது, வீடு கடக்கையில் சடக்கென மின்வெட்டியது போன்றபார்வை என அடுத்தடுத்து தொடர்ந்தது காதல்.மனம் ஒவ்வொரு செய்கைக்கும் அர்த்தம் சொல்லக் கற்றுக்கொண்டது. அவளது பிந்திய வருகைகள் எனது தனிப்பட்ட தவிப்பாக அலைய ஆரம்பித்தன. செக்கன் நேரக்கணக்குகள்
நீண்டயுகாந்திரங்களாயின.

உன் நதியில் சுழித்தோடும் சருகுநான்
உன் இஷ்டப்படி எங்கேனும் கூட்டிச்செல்.

என் அடுத்து வந்த நாட்கள் புவியீர்ப்பு விசைப்பிரகாரம் நடக்கவில்லை.. எல்லாம் விழியீர்ப்பு விசைப் பிரகாரம். நிற்பதும், நடப்பதும்,நினைவின்றி இருந்ததுமென என்வசம் நானிருக்கவில்லை. நீயே நிறைந்திருந்தாய்.

மடியில் இருப்புக்கொள்ளாத குழந்தையென திமிறியது காதல்.
அள்ளிக்கொண்டு போயேன்
என் காதலியாக இல்லையென்றாலும்
எனது காதலைப் பிரசவித்த தாயாகவேனும்!

நாங்கள் இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் பாடசாலைக்கு பிந்திய மாலைகளை விரயம் செய்தோம். கருத்தூன்றி வினவுவதெனவும், கண்ணூன்றி பார்ப்பதெனவும் எழுதப்படாத ஒப்பந்தங்களில் எங்கள் விழிகள் கையொப்பமிட்டன. (கைகள் போட்டால் தானே கையொப்பம்?????) ஆமாம், இல்ல! அதனால் கண்ணொப்பம்.

நியூட்டனின் மூன்றாம் விதி, சமனும் எதிருமான மறுதாக்கம் என மாய்ந்து மாய்ந்து காதலித்தது கண்கள்.. அந்தக் கல்வி நிலையம் சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் இருந்தது. செருக்கல் பிள்ளையார் கோவிலின் உபதெருவும்,தபாற்கந்தோர் வீதியும் சந்தித்த வளைவான இடங்கள் படிப்பைத் தவிர எல்லாவற்றையும் கற்பித்தது.

மருதடி  சங்கக்கடையும், அதனை அண்டிய பிரதேசங்களும் என் கண்காணிப்பு வலயங்கள்.

தரிசனம் கிடைக்காதா? என்மேல் கரிசனம் கிடையாதா?
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்.
உன் பூஜைக்கு நெஞ்சினில் பூ வளர்த்தேன்.   (இசை கேட்க அழுத்துக.)

உன் பூஜைக்கு நெஞ்சினில் பூ வளர்த்தேன்.

 

Mail:     aruthra.tharisanam@hotmail.com

                                00000000000000000000000000000000000000000000000000000

மறுமொழி  எழுதியவர்  சித்திரவீதிக்காரன்

இளையராஜாவின் இசையின் காதலனாகவே நானும் இருக்கிறேன். அவரது இசையமைத்த சில பாடல்களைத்தான் இப்போது அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அவை,
1. மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ!
2. நிக்கட்டுமா! போகட்டுமா! நீலக்கருங்குயிலே!
3. மானின் இரு கண்கள் கொண்ட மானே! மானே!
4. மீனம்மா! மீனம்மா! கண்கள் மீனம்மா!

அவ்வப்போது சிலபாடல்களை இப்படி அடிக்கடி விரும்பிக்கேட்கிறேன். அது இளையராஜா பாடலாக இருந்தால் கொண்டாட்டந்தான்.இளையராஜாவின் சித்திரத்திற்கும் ரசிகன் நான். ஆனந்தவிகடனைப் புரட்டும் போது இளையராஜா, ஹாசிப்கான், ராஜ்குமார்ஸ்தபதியின் சித்திரங்கள் வந்திருந்தால் அவற்றைத் தனியே எடுத்துவைத்துக்கொள்கிறேன். அற்புதமாக வரைகிறார்கள்.

உங்கள் காதல் அனுபவப்பதிவுகள் அருமை.
பகிர்விற்கு நன்றி.

ஆருத்ரா: நன்றி   மதுரை   நண்பரே

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மறுமொழி எழுதியவர்  kausikan

I like very much your way of writing in tamil. Most of the words are new to me. Really good and i will suggest this web site to my friends and relatives.

—————————————————————————————————————————————————-

 மறுமொழி: ஜே.வி.வேலாயுதம்பிள்ளை.

பதிவினை வாசிக்கும் அனைவரும் தமது பதின்மவயதினை நிச்சயமாக நினைவுகூருவர். பதின்மவயது பிள்ளைகளை அனுசரித்துவாழ்வதற்கு உதவும் நல்ல பதிவு. இளையராசாவின் இசை தொடரட்டும்.

ஆருத்ரா எழுதியவை | மே 10, 2012

வடிவேலுவின் சித்தாந்தம்.

 

காலையில் கண்விழித்ததும்
வந்தமர்ந்து கொள்கின்றன.
கடமைகளும், காரியங்களும்.

எதை விடுவது?
எதைத் தொடர்வது?

டாய்லெற்றிலிருந்து
வெளிவருகையில் கேட்கின்றாய்.
“அண்ணே! சாப்பிட்டாச்சா?”

வடக்குபட்டி ராமசாமியிடம்
கொடுத்ததை
திரும்பப் பெறமுடியவில்லை.
“புட்டுக்கிட்ட கேஸ்”

ஒரு ரூபாய் கொடுத்து
வாங்கச் சொன்ன
இரண்டு பழத்தில்
“இன்னொண்ணும் இதுதாங்க”
என்கிறாய்.

எப்படிப் பிழைப்பேன் நான்?

தெரிவுகள் பிழைக்கையில்
வலுப்பெறுகின்றன.
“ஆணியே புடுங்க வேண்டாம்” எனும்
சித்தாந்தம்.

அவ்வ்வ்வ்.

—————————————————————————————————————————————————-

ஆருத்ரா எழுதியவை | மே 6, 2012

நானும் நீயும் – ஜெயபாஸ்கரன்.

கவிதை என்பது மிகக்குறைந்த சொல்லாட்சியுடனான  இலக்கிய வடிவமாகும். அதற்குள் சப்தங்கள் சந்தங்களுக்குள் அடங்கி நிற்பதும், வெளிப்படும் தன்மையில் வானுயர் நிலையில் வளர்ந்து நிற்பதும் அற்புதமாக நடந்தேறுகின்றன. அணுவின் அளவும் அடங்கிடாத சக்தி வடிவமுமாக கவிதைகள் வீரியமானவை.

ஓவ்வொரு கவிதைகளும் அதன் வாசிப்புத்தளத்தில் உறைந்து போன நினைவுகளை உருக வைத்துவிடுவதாக இருக்கின்றன. அந்த நினைவுகளை காலாகாலத்திற்கும் சுமந்துதிரிந்து வாசிப்புத்தளத்திற்கும், வாழ்க்கைத்தளத்திற்கும் விதைத்துவிட்டுப் போகின்ற ஒரு சராசரி கனவுடை மனிதனாக காலம் என்னை ஆக்கி வைத்திருக்கின்றது.

ஜெயபாஸ்கரனின் கவிதைகள் எனக்கு அறிமுகமானது எனது முதல் பெண்குழந்தைக்கு நான் அறிமுகமான ஒரு அந்திமாலை நேரம். ஆனந்தவிகடன் தனது எழுபத்தைந்தாவது வயதைக் கொண்டாடிய பவளவிழா மலரின் கவிதைத்தொகுப்பில் “நானும் நீயும்“ கண்டேன். வாழ்வென்பது காலத்திற்கும் கொண்டாடவேண்டிய நாட்களின் சாரம் என்பது போன்ற அன்றைய நாட்கள் வாசிப்பிலேயே கழிந்தது. ஜெயபாஸ்கரனின் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடான அக்கவிதை ஒரு நீண்ட நெருடலாக என்னுள் உட்கார்ந்து கொண்டது.

வாழ்வு முறித்துப்போட்ட மானுடர்களும், காலச்சேற்றுக்குள் முக்குளித்து மூச்சுத்திணறும் மனுசிகளும் வகைதொகையன்றி வந்து போனார்கள். வாழ்வும் வளமும் எப்போதும் வசந்தகாலமாகவே இருப்பதில்லை. ஏதாவதொரு பின்னரவில் திடுக்கிட்டு முழித்துக் கொண்டு,அந்தகார இருளில் தொலைந்து போன மௌனங்களுக்காக அழுது வடிக்க வேண்டியிருக்கின்றது.

கரை அழுக்கேறி புகைபடிந்த புகைப்படங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தாத்தாவின் நாற்காலியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் பாட்டியின் உருவம், எதையோ சொல்லமுற்பட்டு முடியாததன் துயரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பாட்டிகளின் கண்களும் துயரப் பெருங்கடலில் நீந்தும் மீன்களாக உலாவி வருகின்றன.

எங்களது சாவகச்சேரி வீட்டிற்கருகில் வாழ்ந்து வந்த அக்கா ஒருவர் நினைவில் வந்து போகின்றார். என் சிறு பராயத்தில் அவர் இளவயதை அண்மித்திருந்தார். சிட்டென பறக்கும் தருணத்தில் அழகாகத் தென்பட்டு,அலை கூந்தல் காற்றிலாட முகம் முழுவதும் அன்றலர்ந்த மலராக காட்சி தந்த அவளை காலம் தன்னோடு மகிழ்ச்சிக்கான அடையாளமாக வைத்துக்கொள்ளும் என எதிர்பார்த்திருந்தேன். அவளது அண்ணன்கள் இருவரும் சிறுதொழில் வணிகர்கள். உதவிகளும் ஒத்தாசைகளும் நட்புகளும் சூழ்ந்த தருணத்தில் அவளின் திருமண ஏற்பாடுகள் நடந்தேறிய பொழுதில் அவ் ஏற்பாடுகள் பற்றிய அறிதலில் ஆர்வமுடையவனாக இருந்தேன்.

யாழ் நகருக்கு அண்மித்த பகுதியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பெண் பார்த்துப் போனார்கள். அடுத்த சில வாரங்களில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறின. அண்ணன்களின் நண்பர்கள் அத்திருமணத்தில் தங்களுக்கான பணிகளை பகிர்ந்து கொண்டு செயலாற்றினார்கள். சிறுவர்களான எங்களுக்கு அந்நாட்கள் கோலாகலமானவை. திருவிழா காலங்களுக்கு ஒப்பானவை.

பக்கத்து வீட்டுக்காரர்கள் பலகாரம் சுடப்போதல், உதவி ஒத்தாசை பண்ணுதல்என அவர்கள் வீட்டில் ஒருவரென ஒன்றித்திருப்பார்கள். கேளிக்கை கூடாரமாக காட்சிதரும் அக்கால திருமண வீடுகள், உறவுகள் ஒன்றித்திருப்பதற்கும் கூடி மகிழ்வதற்கும் வழி அமைத்தன.

திருமண நாட்களின் முதல்நாளின் இரவுகள் பலரையும் இணைத்திருக்கும். வேலிகள் வெட்டப்பட்டு தென்னோலை மடித்து பலகைகளில் வைத்து அடித்து வளைவுகள் அமைத்து பொருத்துவது அழகான கைவினை. இருபக்கமும் தூங்கித் தொங்கும் குலைவாழைகள்,தென்னோலை மடித்த தோரணங்கள்,சமையலுக்கான ஆண்களின் பெருமெடுப்பிலான ஏற்பாடுகள் என திருமண வீடுகள் கலகல ரம்மியம்.

இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பவரால் கழற்றிப்போடப்படும் FLASH லைற்றுகள் சிறுவர்களான எமது சேகரிப்பிற்குட்பட்டவை. அத்தருணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு என்னையும் நிற்பாட்டி வைத்தால் நாணிக்கோணி பெரும் வெட்கமுடைய மாந்தனாக காட்சி தருவேன். புகைப்படம் எடுத்தலும் பின்னாட்களில் அதனைப் பார்த்தலும் சந்தோச சாட்சியங்கள்.

அவ்வாறான பொழுதொன்றில்நிகழ்ந்த அளவின் திருமணத்திலன்று அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் ஒன்றிலேறி மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் கால்மாற்று விசேடத்திற்கும் சென்று வந்திருந்தேன். கால நகர்வில் காட்சிகள் மாறின. அந்த அக்காள் யாழிற்கு குடிபெயர்ந்தாள். அதில் ஆறு மாதங்கள் தொலைந்து போயின. எனது பத்து சோலிகளுடன் இது பதினொன்றாம் சோலி என்பதால் அது என் கவனத்தைப் பெறவில்லை.

எஞ்சிய நாட்களில் அவளது அண்ணன்கள் யாழிற்கு சென்று தங்கையைப் பார்ப்பதும் அதன் செய்திகள் வேலிகளால் பரிமாறப்படுவதாகவும் இருந்தது. அவள் சீரும் சிறப்புமாக வாழ்வதாக ஒரு காட்சி என் மன அடுக்குகளில் வியாபித்திருந்தது.

எண்பத்தொன்றாம் வருடம் எனநினைவு. பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் அவர்கள் வீட்டில் பலமான கூச்சல்களும், நாறல் பேச்சுக்களும், நயமான தொடரின்றி வீதி எங்கணும் பரிமளித்தது. குடிபோதையில் திணறும் மாப்பிள்ளையின் அடி உதைகள் அக்காள் மேல் விழுந்தன. நாராசமான கெட்ட வார்த்தைகள் காற்றில் தவழ்ந்தன. குடிகாரன் ஒருவனுக்கு தங்கையை தாரை வார்த்துக்கொடுத்த அண்ணன்கள் பதுங்கிப் பலமிழந்து போனார்கள். விக்கிரமாதித்தன் கதையில் வருவது போன்று நாடாறு மாதம், காடாறு மாதம் என தாய்வீட்டிலும் நாய்வீட்டிலும் அவளது காலங்கள் கழிந்தன.

20 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் யாழ் சென்றபோது தேடிப்பிடித்து சென்று பார்த்தேன். காலம் சப்பித்தின்று விட்டு போட்ட எச்சங்களாக அவர்கள் தெரிந்தார்கள். தன்னைத் தேடி பார்க்க வந்ததற்காக கண்ணீர் உகுத்தார்கள்.மகனை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி குளிர்பானம் வாங்கி வரச்செய்து உபசரித்தார்கள். அந்த மகன் அவர்களது இரண்டாவது மகன். கடையொன்றில் வேலை பார்ப்பதாக கூறி வைத்தாள்.

ஒரு நிறைவற்ற கவிதையின் சந்தப்பிழைகளாகவும் காட்சிப்பிழைகளாகவும் அவள் காட்சி தந்தாள். இப்போது நினைத்துப்பார்த்தால் ஆணின் அடக்குமுறைக்குள்ளான அவல மனுசியாகி ஜெயபாஸ்கரனின் கவிதை நாயகியாக திகழ்கின்றாளோ என அவதியுற்றுப் போகின்றேன்.

முன்னெப்பொழுதிலும் இல்லாத அளவிற்கு தென்படாத அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. நாகரீக சமூக அடையாளங்களில் வேறுவிதங்களில், வேறுவடிவங்களில். வேலைசெய்வதான சுதந்திர உலகில் அவர்களைப் பிரவேசிக்கவிட்டு அலுத்துக்களைத்திருக்கும் அவர்களின் மீது உரிமையுடன் கணவனால் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகின்ற வகையில் வடிவங்கள் மாறியிருக்கின்றன.

நானும்  நீயும்

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

ஜெயபாஸ்கரன்.

சமூக அக்கறை கொண்ட வெகுஜன கவிஞர். நூற்பாலை ஒன்றில் எளிய தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி தேவி வார இதழில் சிலகாலம் பணி புரிந்துவிட்டு மக்கள் தொலைக்காட்சி ஆலோசகராக பணி செய்து வருகின்றார்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் அருகே காட்டுப்பாக்கம் சொந்த ஊர். புதுக்கவிதையின் தேர்ந்த சொல்லாடல், சொற்சிக்கனம், எளிமை, சிறிதானகேலி இவரின் கவிதை அடையாளம்.

இவரது கவிதைகள் ஜெயபாஸ்கரன் கவிதைகள் என்று முழுத்தொகுப்பாகவும், கட்டுரைகள் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் என்ற தலைப்பில் முழுத்தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. இவரது அண்மைய கட்டுரை கடைசிப் புகையின் கல்லறை.

வாசகர்கள்   கவனத்திற்கு!

பத்திரிகைத்தாள்களின் விலையேற்றம் காரணமாகவும், அச்சு மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும்”ஆருத்ரா தரிசனம்” அடுத்த பதிவில் இருந்து ஒரு ரூபாய் ஐம்பது காசுகளால் விலை உயர்த்தப்படுகின்றது.வாசகர்கள் தொடர்ந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
– நிர்வாகம்.

ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 30, 2012

சாவகச்சேரி மீன் சந்தை.

மீன்சந்தை கட்டடத்தொகுதி,
முன்பக்கம் ஆட்டிறைச்சி கடைகள்.
பின்பக்கம் மூத்திரநெடி சூழ்
வயற்பக்கம்.

பரபரவென்று வந்துமோதும்
வயற்காற்று.

அப்பால் ஆமணக்கம் பற்றை தாண்டிய
நூலகம்.
நூலக வளாகத்தில் குரோட்டன் செடிகள்.
முன்றலில் இருந்தபடி சிலை.

சுற்றி நிறுத்தப்பட்ட சைக்கிள்களில்
என் சைக்கிளுடன்
அவள்களின் சைக்கிள்கள்.

வீதி தாண்டிய விறுமர் கோவில்.
பஸ் ஸ்ரான்டின் முனை சந்தில்
முன்னொருகாலம்
பேப்பர் திராட்சை விற்கும்
படிகளின் கீழான கடை.
கிருயோன் கூல்பார்.

முன்னால் டிறிபேர்க் கல்லூரி.
யாழ் செல்லவென
புத்தகக்கட்டுடன் நின்ற
இறந்த காலத்து காலைகள்.
அரை றாத்தல் பாண் என விளிக்கும்
மினி பஸ்கள்.

பஸ் கடக்கையில் விலத்தியது
நுணாவில் வைரவர்கோவில்.
அட! நம்ம குமுதம் வீடு.
மூக்கில் நெடிந்த பாணின் வாசம்
யூனியன் பேக்கரி வினவுதல்கள்.

ஆங்கோர் பொழுதில்
பனிக்குளிர் துளைத்தெடுக்க
பகற்பொழுதில் அலாரம் வைத்து
பின்னிரவில் விழித்தெழும்
நான் தொலைத்தது
என்னை, எங்களை, எல்லாவற்றையும்!

எனது தளத்தை மேய்பவர்கள் கீழ்காணும் google+1  ஐ அழுத்தி   email ID  கொடுப்பதன் மூலம் புது இடுகைகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆருத்ரா எழுதியவை | ஏப்ரல் 26, 2012

ஆத்தா- நான் பாஸாயிட்டேன்!

பரீட்சைகள், பெறுபேறுகள் கல்வி கற்கும் மாணவர்களை மாத்திரம் பாதிப்பதில்லை. பெற்றோர்களையும்,அவர்களுக்கு கற்று தந்த ஆசிரியர்களையும் பாதிக்கின்றன. பாதிப்பு என்பது வெறுமனே துயர் கவிந்த பாதிப்பு மாத்திரம் அல்ல, இன்பம் நிறைந்த பாதிப்புகளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

கல்வி என்பது மேலான செல்வம் என்ற பொருளுடன் மேலான இன்பம் என்றும் பொருள் கொள்ளவேண்டும்.அலைந்து அலைந்து வந்தேறு குடிகளாக வாழ்வமைத்துக்கொண்ட ஈழத்தமிழனுக்கு சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான முதலீடு கல்வி மாத்திரம்தான்.

அண்மையில் சுவிட்சர்லாந்தில் Gimi prüfung என்றழைக்கப்படும் ஆறாம் வகுப்பில் மாணவர்களை தரம் பிரிக்கும் பரீட்சைகள் நடந்து முடிந்திருக்கின்றன. சூரிச் மாநிலத்தில் மார்ச் 12ம் திகதி பரீட்சைகள் நடந்தெய்தின. டொச் மொழிப் பரீட்சை, கணிதப் பரீட்சை என இரண்டு வினாத்தாள்கள் கொண்ட இத் தேர்வில் தோற்றும் மாணவர்கள், ஏற்கனவே வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று ஆசிரியர்களினால் தெரிவு செய்து அனுப்பப்பட்டவர்கள். இந்த பரீட்சையில் மாணவர்கள் சராசரியாக 4.5 புள்ளிகளுக்கு கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்.

இங்கே நூற்றிற்கு புள்ளிகள் இடப்படுவதில்லை. ஆறிற்கு புள்ளிகள் அளிப்பதால் 4.5 என்பது 75 வீதமான புள்ளிகளாகும். டொச் வினாத்தாள் இரு பகுதிகளை கொண்டது. மொழிவளம், கட்டுரை எழுதுதல் என்ற வகையில் இரண்டு பரீட்சைகள். பரீட்சையில் தவறான விடைகளுக்கு கழித்தற் புள்ளிகள் அளிக்கப்படுவதால் தேர்வு மிக இறுக்கமானது.

இப்பரீட்சைக்கான மாணவர்களை தயார்படுத்தல் மிக அளப்பரிய பணி. பெற்றோர்களுக்கு அதிக நேரத்தை பிள்ளைகளுடனே செலவிட வேண்டும். நல்ல கல்வி நிலையங்களை அடையாளம் கண்டு கொள்வது, கற்க அனுப்புவது, காத்திருந்து கூட்டி வருவது, பிள்ளைகளுடன் அலைவது என நீண்ட பட்டியல்.

பாடசாலைக் கல்விக்கு வெளியேயாக, தனியார் கல்வி நிலையங்களுடன் மாத்திரம் நின்று கொள்ளாது சில பெற்றோர்கள் ஆர்வ மேலீட்டில் வேறு பல ஆசிரியர்களிடம் அனுப்பி, கல்வி திணிக்கும் கைங்கர்யம் நடக்கும். சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த ஆசிரியரிடம் கல்வி கற்கிறார்கள் என்ற விடயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. யாம் பெற்ற இன்பம் தங்களுடனேயே தொலையட்டும் என்ற தொலைநோக்கு அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது.

பாடசாலையால் ஐந்து மணிக்கு வரும் மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு படை எடுத்துவிட்டு வீடு திரும்ப இரவு எட்டுமணி ஆகிவிடும். பாடசாலையில் கொடுத்து விடும் வீட்டுவேலை சமாச்சாரங்களை முடித்துவிட்டு நிமிர்ந்தால் கற்றவற்றை திருப்பிப் பார்ப்பதற்கு போதுமான அவகாசம் இருப்பதில்லை. கற்றலும் கற்றலை மீட்டலும் அதிக பலன் தரும் என எனக்கு கற்பித்த ஆசிரியர் அடிக்கடி சொல்வது நினைவில் வந்தாடுகின்றது.

பரீட்சை, தேர்வு, சோதனை என்று எல்லாமாக அழைக்கப்படுகின்ற இத்தெரிவு முன்னெப்பொழுதோ உணவுக்காக திணித்து ஊட்டப்பட்ட வாத்துக்களை ஞாபகப்படுத்துகின்றன. ஐரோப்பாவில் மிகப்பிரபலமான உணவொன்றிற்காக திணித்து ஊட்டப்பட்டு வாத்துக்கள் வளர்க்கப்படுகின்றன. தொண்டைக்குழிக்குள் குழாய் திணிக்கப்பட்டு அதனூடாக உணவு வாத்துக்களுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிராணி நலன்சார் அமைப்புகள் இதற்கெதிராக போர்க்கொடி உயர்த்தி இருந்தன. பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் ஏதாவதொரு ஷரத்தின் கீழ் மாணவர்களையும் காப்பாற்றியாக வேண்டும்.கல்வி என்பது மாணவர்களின் விருப்பத்தின் பேரில் நடப்பதாயின் அறிவுவிருத்தி. பேற்றோர்களின் திணிப்பின் பேரில் நடப்பதாயின் அழிவுவிருத்தி.

KANTON SCHULE என்றழைக்கப்படுகின்ற இப்பாடசாலைகள் சூரிச் மாநிலத்தில் பரீட்சைக்கு தோற்றி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களால் நிறைக்கப்படுகின்றனர். ஏனைய மாணவர்கள் பிறபாடசாலைகளுக்கு சென்றாக வேண்டும். KANTON SCHULE இற்கு செல்லும் மாணவர்கள் ஆறு கல்வி ஆண்டுகளை பூரணப்படுத்த வேண்டும். ஆறாம் கல்வி ஆண்டில் நடைபெறும் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதி கோரமுடியும். இது நேர்வழி.

ஆறாம் வகுப்பில் அல்லாது எட்டாம், ஒன்பதாம் வகுப்புகளிலும் இப்பரீட்சைக்கு தோற்றமுடியும். ஆறாம் வகுப்பில் இரண்டு வினாத்தாள் கொண்ட இப்பரீட்சை எட்டாம் வகுப்பில் பிரெஞ்சையும் உள்ளடக்கி மூன்று வினாத்தாள்களை கொண்டதாக அமைகின்றது.

ஈழத்தமிழ் சமூகம் எப்பொழுதும் நேர்வழியிலான வழிமுறைகளை கைக்கொண்டதாக, இலங்கை கல்வி முறைகளுக்கு பழக்கப்படுத்திக்கொண்டதால் வேறு மாற்றீட்டு தேர்வு முறைகளை பரிசீலித்துப் பார்ப்பதில்லை. பிரிட்டிஷ் பழைய பாடத்திட்டத்தின் எச்ச சொச்ச நினைவுகளை தம் மக்கட்செல்வங்களிடம் திணித்து தங்கள் மேலான விருப்பங்களை அவர்களுக்கூடாக அடைதல் பெற்றோர்களின் வெற்றி மதிப்பீட்டின் தேர்வுகளாக அமைகின்றன. பெற்றோர்களின் தெரிவு மாணவர்களுக்கு சோதனைகளமாக அமைகின்றன. இப்பொழுதாவது தேர்வு, சோதனை என்ற ஒரு பொருள் கொண்ட சொல்லின் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்திருப்பீர்கள்.

ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் Gimi prüfung என்றழைக்கப்படும் இப்பரீட்சைக்கான பிரத்யேக வகுப்புக்கள் நடைபெற்றன. பாடசாலைகளிலும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களினால் தெரிவான மாணவர்கள் ( ஒன்று இரண்டு மாணவர்கள்) பிரத்தியேகமாக கவனிக்கப்பட்டார்கள்.

Learn büro என்றழைக்கப்படும் கல்வி நிறுவனம் 10 பாடவகுப்பு கொண்ட பயிற்சிநெறிக்கு 750 Sfr அறவிட்டுக் கொள்கின்றது. இதுவரை நடைபெற்ற பரீட்சை வினாத்தாள்களுக்கு மாணவர்களை தயார்படுத்தி தோற்றவைத்து அதனடிப்படையில் புள்ளி வழங்குவார்கள். அந்நிறுவனத்தின் மதிப்பீடும், பின்னரான தேர்வின் மதிப்பீடும் ஒத்துப்போவது பெருமளவிற்கு நடந்தேறி வருகின்றது.

இப்பரீட்சைக்கு தோற்றமுடியாத மாணவர்கள் 8ம் வகுப்பிற்கு பின்னர் ஏதாவதொரு தொழிற்கல்வியை தெரிவு செய்து அதனடிப்படையில் மேற்கொண்டு கல்வியை தொடரவேண்டும். உதாரணம் கொள்வதாயின் வங்கிகளிலோ, அலுவலகங்களிலோ பணிபுரிய விரும்புபவர் வங்கிகளுக்கு அலுவலகங்களிற்கு விண்ணப்பங்களை அனுப்பி அவர்களால் தெரிவான பின்னர் அங்கே மூன்று நாட்கள் வேலை செய்துகொண்டு இரண்டு நாட்கள் பாடசாலைக்கு சென்றாக வேண்டும். மூன்று வருட முடிவில் அந்த வங்கியில் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அங்கேயே வேலை கிடைக்காவிட்டால் வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலை பெற்றாக வேண்டும். மூன்று நாட்கள் தொழிற்கல்வி+ இரண்டு நாட்கள் பாடசாலைக் கல்வி எனத் தொடரும் கற்கைநெறி மூன்று ஆண்டுகள் கொண்ட DIPLOM பரீட்சையுடன் நிறைவு பெறுகின்றது. இதே வகையில் பிறபணிகளுக்கான கற்கைகளைத் தொடர முடியும்.

                                                      – இவை இப்பரீட்சை தொடர்பான விபரங்கள்.

என்னை உறுத்திய விடயம்:

பெறுபேறுகள் வெளியான நாளிற்கு அடுத்தநாள் பரீட்சை எழுதிய ஒரு மாணவனின் தாயார் அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். அவருடன் உரையாடமலேயே காரணம் விளங்கிவிட்டது. சாதாரண சிறு விடயங்களுக்கே கண்டித்து அடி பின்னி வாங்கிவிடும் அவர், பரீட்சையில் சித்தியடையாத தன்மகனை போட்டு மிதித்திருப்பார் என எண்ணினேன். ஒரு பாடத்திற்கே ஒன்றிற்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் மகனை அனுப்பி திணித்து ஊட்டப்பட்ட கல்வியை பரீட்சை நாளில் வாந்தி எடுக்கும்படி செய்ய விளைந்த அந்தத்தாய் மனரீதியாக அழுத்தப்பட்டிருக்கும் மகனக்கு ஆறுதல் சொல்லவல்லவா முயற்சித்திருக்க வேண்டும்?

மாணவர்களுக்கு தேவை அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு உணர்வு, அதை மிஞ்சிய கருணை. பரீட்சைப் பெறுபேறுகள் வாழ்வாதாரங்களை தேடிக் கொள்ள முனையும் மனிதர்களுக்கான கௌரவப் பட்டயங்கள். வாழ்வின் தெரிவிற்கான தேர்வு அல்ல.

சுவிட்சர்லாந்தில் ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட தமிழ் சமூகத்திலிருந்து விகிதாசார அடிப்படையில் பல மாணவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள்.
மகிழ்வு கொள்க!

எனது தளத்தை மேய்பவர்கள் கீழ்காணும் google+1  ஐ அழுத்தி   email ID  கொடுப்பதன் மூலம் புது இடுகைகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்வீர்கள்.

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்