சேகுவேராவுக்கும் எனக்குமான ஒரே ஒரு ஒற்றுமை மிக அதிசயமானது. அந்த ஒரு ஒற்றுமையைத் தவிர சேகுவேராவை என்னுடன் இணைப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை. சே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். உயர்வான போராளி. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். நான் இக்கணம் மிகுந்தும் அக்கணம் தாழ்ந்தும் என நம்பிக்கை கொண்டவன். சேகுவேராவுக்கு எங்களுக்கு வாய்த்த ஒரு மனோமாஸ்டரோ, உப-அதிபரோ வாய்க்கவில்லை. ஆரம்பத்திலேயே அவ்வாறு வாய்த்திருந்தால் பாட்டியை காரணம் காட்டாமலேயே பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்திருப்பார்.
சேகுவேராவுக்கு ஒரு பாட்டி இருந்தார் என்பதுவும் அந்த பாட்டிக்கு மார்பகப்புற்று நோய் வந்து காலமானார் என்பதுவும் பாட்டி மீது அதிகபாசம் வைத்திருந்த சேகுவேரா “இனி ஒருபாட்டியும் மார்பகப்புற்றுநோயால் இறக்ககூடாது- அதற்கு மருந்துகண்டுபிடிக்கவேண்டும்” என்று கங்கணம் கட்டி பொறியியல் படிப்பை கைவிட்டு மருத்துவபடிப்பை தேர்ந்தெடுத்தார் என்பதும் புத்தகவாயிலாக அறியக்கிடக்கும் தகவல்கள்.
எங்களது ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான காலங்கள் அலாதியானவை. ஆனந்தமளிப்பவை. நாலு தேவாரம் பாடமாக்கி ஒப்பித்து, ஒருசொல்வதெழுதுதல் எழுதிதப்பித்து – கூட்டிக் கழித்து பெருக்கி கணக்குகாட்டி இறுதி தவணைப் பரீட்சையில் புள்ளிகள் பெற்றுக்கொண்டால் பரீட்சை பெறுபேற்றுத் தாளின் அடியில் “வகுப்பேற்றப்பட்டுள்ளார்” எனஆசிரியர் எழுதி விடுவார். அதனடிப்படையில் நாங்கள் வகுப்பேற்றப்பட்டுக் கொண்டிருந்தோம். இவ்வாறான நடவடிக்கை பத்தாம் வகுப்புவரை கிரமமாக நடைபெற்று கொண்டிருந்தது. அந்தக் கிரமத்தின் காரணமாக எங்களுக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.
பத்தாம் வகுப்பு பரீட்சையில் கொஞ்சம் நிறைவான பெறுபேறுகள் பெற்றுக் கொண்டவர்களானால் தொலைந்தோம். கணிதத்திலோ, விஞ்ஞானத்திலோ மிகக்குறைவான புள்ளிகள் பெற்றுக்கொண்டவர்கள் கலை, வர்த்தகப் பிரிவுகளை இலகுவாக தேர்ந்தெடுத்துக் கொள்ள – எல்லாப்பிரிவுகளையும் தேர்தெடுக்ககூடியபுள்ளிகள் வைத்திருப்பவர்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனை ஆகிவிடும். தலையில் ஹெல்மெற் போட்டுக்கொள்ளும் படிப்பா? கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொள்ளும் படிப்பா? என தேர்ந்தெடுப்பது அதுவரை வகுப்பேற்றப்பட்டு வந்த சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கஸ்டமானதுதானே.
நான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தது கணிதத்தை. தலையில் ஹெல்மெற் மாட்டிக்கொண்டு, பெரிய கட்டிடங்கள் கட்டும் பகுதியில் கோப்புகள் வைத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கும் பொறியியலாளர் கனவுகள் ஏதும் எனக்கு இல்லையாயினும் எனது நெருங்கிய இரண்டு நண்பர்களும் கணிதத்தை தேர்ந்தெடுத்ததே நானும் அவ்வழி புகக் காரணமாக இருந்தது. அதன் பெறுபேறுகளை அடுத்து வந்த இரண்டு வாரங்களில் நான் பெற்றுக்கொண்டேன்.
பாடசாலையில் க.பொ.த உயர்தரம் தொடங்குவதற்கு முன்னரான பாடசாலை விடுமுறைக்காலப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த உயர்தர புதுமுகவகுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. கச்சாயில் அப்போது மனோமாஸ்டர் கணித வகுப்புகள் எடுத்து வந்தார். எனது நண்பர் ஒருவரே என்னையும் மனோமாஸ்டரின் கணித வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார். எங்களோடு பத்தாம் வகுப்பில் படித்த பலநண்பர்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். மனோமாஸ்டர் அன்றுகற்பித்தது SIN, COS, TAN.
வகுப்பு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் நான் எனது நண்பரின் முகத்தை பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல மனோமாஸ்டரின் கரும்பலகை எனக்கு ஆகிவிட்டிருந்தது. ஆரம்பமே இவ்வளவு அசத்தலாக இருந்தால் இனிவரும் காலங்களில் என்னாகுமோ என எண்ணத்தலைப்பட்டேன். மனோமாஸ்டர் கடுகதிவேகத்தில் பாடத்தை நடாத்திக் கொண்டிருந்தார். நான் அதன் பின்னே விரைய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்.
கற்பித்தல் என்பது ஒரு கலை. ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றவர்களால் மாத்திரமே ஒரு திறமையான ஆசிரியராக முடியும் என்பதைவிட, கடிடனமான விடயங்களையும் சுவைபடக் கற்பிப்பதற்கு சில ஆசிரியர்களின் தனிப்பட்ட கற்பித்தல் ஆளுமை முழுமை பெற்றிருந்ததை சொல்லியாக வேண்டும்.
வெக்டர் வேலாயுதம், நல்லையாமாஸ்டர் போன்றோரிடம் இரட்டைக்கணித வகுப்புகளுக்கு செல்பவர்களைக் காட்டிலும் ரவிமோகன் மாஸ்டர் வகுப்பில் மாணவர் குழாம் அதிகம் இருக்கும். யாழ் பெருமாள் கோவிலுக்கு முன்பாக ரவிமோகன் மாஸ்டரின் டியூசன் கொட்டில் மிக நீண்டது. முன்னால் கரும்பலகைக்கும், கடைசி வாங்குக்கும் இடையிலான இடைவெளி 75 மீ ஆவது இருக்கும். கற்பித்த கணக்கை அழகாக எழுதி செய்முறையுடன் கடைசியாக விடையையும் எழுதிவிடுவார். பார்த்து எழுதும் கூட்டத்திற்கு எவ்வித கஸ்டமும் இருப்பதில்லை.
ஒரு நல்லஆசிரியருக்கு அழகு மாணவர்களை கலவரப்படுத்தாமல் பாடம் எடுப்பது. ஆசிரியரும் மாணவரும் பாடத்திற்கு ஊடாக பயணிப்பது. மாறாக பெரும்பாலான ஆசிரியர்கள் தாங்கள் கற்றதை மாணவர்கள் மீது திணித்துக் கொண்டிருந்தார்கள்.
மனோமாஸ்டர் ஒருவட்டம் வரைந்து அதனை நான்காகப் பிரித்து SIN- COS- TAN விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். எனக்கு வட்டத்தைப் பார்ப்பதா? கூரையின் விட்டத்தைப் பார்ப்பதா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அன்றைய ஒரு வகுப்பிற்கு பின்னால் அடுத்து நடந்த வகுப்புகளிற்கு நான் சமூகமளிக்கவில்லை.
கச்சாய் வகுப்புகளில் இருந்தும் கழன்று யாழ் சென்று ரவிமோகன் மாஸ்டரின் வகுப்புகளில் உட்காரத்தொடங்கினேன். உள்ளூரில் சிறிய டியூசன் வகுப்புகளில் படித்தவர்களுக்கு யாழ்ப்பாண டியூசன் கொட்டில் கலாச்சாரம் மாறுபட்டது. மாணவர்களுக்கு கரும்பலகைக்கு கிட்டேயுள்ள ஆசிரியர் நிழலாகத் தெரிவார். ஆசிரியருக்கு தன்னிடம் யார்.. யார்? படிக்கின்றார்கள் என்ற பரிச்சயமே கிடையாது. கணிதப்பிரிவில் பெண்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களை காட்டிலும் அங்கு வேலைபார்த்த செக்ரெட்டரி பெண் அழகாக தென்பட்டாள்.
பாடசாலை விடுமுறை காலப்பகுதி முடிந்து பாடசாலைகள் தொடங்கிவிட்டிருந்தது. பத்தாம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டத்திற்கு ஊடாக பயணித்தவர்கள் பல்வேறு கிளைப்பாதைகளூடாக பயணிக்கத் தலைப்பட்டோம். எங்களது கணித வகுப்பிற்கு வகுப்பு ஆசிரியராக உப-அதிபராக கடமையாற்றியவர் நியமனம் பெற்றார். அவருக்கு எதையாவது சொல்லிப் புரிய வைப்பது எங்களுக்கு பெரும்பாடாயிற்று. எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை என்று சொல்வது அவருக்கு விளங்கவில்லை.
அதாவது அவருக்கு கேட்கும்திறன் மிகவும் மந்தமாக இருந்தது. எங்களது வகுப்பறை வீதிக்கருகில்- தண்டவாளத்தை ஒட்டிய பிரதானவாயிலுக்கு அணித்தான வகுப்பறை. எண்பத்து நான்கில் இரயில் போக்குவரத்து கிரமமாக இருந்தது. ஒருநாள் மதியத்திற்கு பிற்பாடான கணிதவகுப்பில் உப-அதிபர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அன்றையவகுப்பில் சார்புவேகம் பாடமாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு காரில் பயணிக்கும் ஒருவன் மணிக்கு இன்ன கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க அருகே விரையும் கார் என்னவேகத்தில் செல்கின்றது என்பது சார்புவேகம். அப்போது இரயில் ஒன்று சங்கத்தானை தரிப்பிடத்தை பெரும் சத்தத்துடன் கடந்து சென்றது. பாடம் நடாத்திக் கொண்டிருந்த உப-அதிபர் தனது வகுப்புமாணவர்கள் சத்தம் போடுவதாக எண்ணிவிட்டார். பெரும் கோபத்துடன் வாங்கில் அறைந்து விட்டு சொன்னார் “இனி சத்தம் போட்டீர்களானால் வகுப்பிற்கு வெளியே நிறுத்தி விடுவேன்”. இரயில் வண்டியை இவரால் எப்படி வகுப்பிற்கு வெளியே நிறுத்தமுடியும்? என எண்ணி கவலைப் படத் தொடங்கினேன்.
இவ்வாறான உசிதமற்ற போக்கு என்னை முற்றாக கணிதப்பிரிவிலிருந்து விரட்டிஅடித்தது. காற்றில் அலைக்கழிக்கப்பட்ட இலை போன்று சஞ்சரித்து கடைசியாக அடைந்தது உயிரியல். உயிரியல் உண்மையில் உயரியல். உடலின் இயக்க கூறுகளை அறிந்துகொள்வதும், சூழலியல் தாவரங்களுடன் பரிச்சயமாவதும் சந்தோசமானவிடயம் தானே.
படம் வரைந்து பாகம் குறித்து பயின்ற காலங்கள். தாவரங்களில் ஆண்டு வளையம் உண்டென்பதையும் அதைக் கொண்டு தாவரத்தின் வயதை சொல்லமுடியும் என்பதும் செவ்வரத்தை HIBISCUS குடும்பத்தை சேர்ந்தது என்பதும் மிளகாய்க்கு CAPSICUM INDICUM என்ற தாவரவியல் பெயர் கொண்டது என்பதும் கற்றலின் சுவாரஸ்யத்தை அதிகரித்துக் கொண்டே போனது.
தாவரவியல் சிவவீரசிங்கம், விலங்கியல் தம்பிராஜா ஆசிரியர்கள் எங்களுக்கு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர்களாக கிடைத்தார்கள். விலங்கியலின் ஒவ்வொரு உட்பிரிவையும் கற்பித்து முடித்தவுடன் தம்பிராஜா ஆசிரியர் சொல்லும் THATS ALL என்ன? வழக்கமான லண்டன்காரர்கள் பாவிக்கும் THATS ALL இலும் மாறுபட்டது.
THATS ALL என்ன? SKELETAL SYSTEM- வன்கூட்டுத்தொகுதி. THATS ALL என்ன? EMBRYOLOGY–முளையவியல்.
ஆசை ஆசையாகக் கற்ற பாடங்களும், கற்பித்தஆசிரியர்களும் கனவுகளில் அணி வகுக்கின்றார்கள். சேகுவேரா தனது பாட்டியை காரணம் காட்டி படிப்பை மாற்றிக் கொண்டதைப் போல நாங்களும் தொடர்ந்து கற்காமல் போனதற்கு நாட்டின் சூழலையும், வீட்டுக்கஸ்ட நிலவரத்தையும் காரணம் காட்டலாம். தப்பில்லையே?. அதைத்தானே கடந்த முப்பது வருடங்களாக செய்து கொண்டிருக்கின்றோம்.
வாழ்க கல்வி!
************************************************************************************************
கெவின் கார்டர் எடுத்து ” டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான சூடான் சிறுமியின் பசி- உணவுத்தேடல் குறித்த புகைப்படம்- பார்த்தவர்களுக்கு வேதனையையும், கெவின் கார்டருக்கு புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது. சூடான் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடிய பொழுதில் பின்மதிய நேரமாக இருக்க வேண்டும். சூடான் நாட்டிற்கு செய்தி சேகரிப்பவராக சென்றிருந்த கெவின் கார்டர் தனது வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பசியால் உடல் நலிந்திருந்த சிறுமி உடைந்த மானுடத்தோடு நடக்கவியலாமல் சிரமப்பட்டு ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்த ஐக்கிய நாடுகள் உணவு வழங்கும் நிலையத்திற்கு தவழ்ந்து செல்கின்றாள். அவளின் உடலில் எஞ்சியிருந்த சக்தியை திரட்டி தூரத்தே கொடுக்கப்படும் உணவை உட்கொண்டால் மாத்திரமே உடலில் உயிர் தங்கியிருக்கும் இறுதி மணித்துளிகளாக அந்தப்பசி அந்தப் பெண்ணிற்கு வாய்த்திருக்கின்றது.
இறுதி நேரத்தில் அந்தச் சிறுமி என்னவானாள்? அவள் உயிருடன் இருக்கின்றாளா? பசி அவளைக் கொன்று விட்டதா? டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தை தொலைபேசி அழைப்புகளால் நிரப்பியது மானுட அக்கறைகள். ஒரு தொழில் முறை பத்திரிகை புகைப்படக்காரராக தன்னை முதன்மைப்படுத்திக் கொண்ட கெவின் கார்ட்டர், வந்த அலுவல் முடிந்தவுடன் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார். பசித்திருந்த சிறுமி பற்றிய தகவல்களை அவர் அறிந்திருக்கவில்லை. மனித நேயத்துடன் நடந்து கொள்ளாமல் தொழில் நேர்த்தியான ஒரு புகைப்படக் கலைஞராக தன்னை வெளிப்படுத்திய கெவின் கார்ட்டர், திரும்பி வந்த கேள்விக்கணைகளால் திக்குமுக்காடிப் போனார். மானுடத்தின் மனச்சாட்சி உலுக்கியது. உயிரின் இறுதி இருப்பை கவனிக்காத குற்ற உணர்வுடன் புகைப்பட பத்திரிகையாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டார்.
உலகத்திற்கும் மனச்சாட்சி என்ற ஒன்று இருக்கின்றது.ஒரு ஊடகமோ ஒரு கலைஞனோ அதை வெளிக் கொணரும்போது அதை ஆமோதிப்பதற்கும் வழிமொழிவதற்கும் “உலக மனச்சாட்சி” தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றது.கெவின் கார்ட்டர் சூடானின் வறுமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியபோது “உலக மனச்சாட்சி” அவர் மீதே பாய்ந்ததுதான் ஆச்சரியம்.
போபாலில் எண்பத்து நான்கில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மானுடங்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்திய அரசு வெறும் ஆயிரத்து எண்ணுாறு பேர் மரணித்ததாக அறிக்கை வெளியிட்டது. இறந்த பின்பு புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து முகம் பார்க்கும் தாயாரின் நிலை கூட கெவின் கார்ட்டரால் புகைப்பட பதிவாக எடுக்கப்பட்டிருக்கின்றது. போபால் விஷவாயு அனர்த்தத்தை இந்த புகைப்படம் ஒன்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றது.
உலகின் தலைசிறந்த 10 புகைப்படங்களின் தொகுப்பில் 1950 களில் இன ஒதுக்கீடு உச்சத்தில் இருந்த சமயத்தில் வெள்ளையர்களின் பாவிப்பிற்கு தனித்தண்ணீர் குழாயும் கறுப்பர்களுக்கென்று தனிக்குழாயும் அமைக்கப்பட்டிருந்த அவலத்தையும் கறுப்பர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அழகாகப் பதிவு செய்கின்றது மேற்கண்ட புகைப்படம். அந்தப்பொழுதில் “BLACK IS BEAUTY” என்று அவர்களுக்கு சொல்லத் தோன்றவில்லை.
கற்பனைகளின் பிரவாகம் வானப்பறப்பில் எழுத்தாக வடிகின்றது. விமானம் துருக்கிக்கு மேலால் பறந்துகொண்டிருக்கின்றது. துருக்கியில் நேரம் 2.13 ஆக இருந்துகொண்டிருக்கின்றது. நான் ஜன்னலோர இருக்கையில் மாட்டிக்கொண்டேன். நடுப்பக்கத்தில் இருக்க கிடைத்திருந்தால் எழுந்திருப்பதற்கும் அடிக்கடிஅப்பால் போய் வருவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.
இதே இருபது எனக்கு…வேண்டாமே. கற்பனை கொள்வதற்கும் கனன்று கொள்வதற்கும் ஏக்கத்து தொனிப்பொருட்கள் ஏராளமிருந்தன.கிடைக்காத ஒவ்வொன்றுமே பெறுமதிமிக்கவைதான்.
சிலவேளை போகலாம் என்றமனநிலையில் இருந்துகடைசியில் அடுக்கும் பண்ணிப் புறப்பட்ட எனக்கும் மூன்று நாட்கள் இருக்ககையில் விரும்பியதேதிக்கு டிக்கெட் கிடைத்தது. விமானம் துருக்கிக்கு அப்பால் கருங்கடலை கடந்துகொண்டிருக்கின்றது. நான் இம்முறைசாவகச்சேரிக்கு போகப் போவதில்லை என்ற திட முடிவுடனேயே எனது பயணத்தை தொடக்கிவிட்டிருந்தேன். தேவையில்லாமல் அங்குபோய்…வெறும் மாமரங்கள் சூழ்ந்த இடிந்து வீழ்ந்த வீட்டின் முன்னால் உட்காரந்து.. அந்த காலைப்பொழுதுகளில் அவளின் CHOPPER சிவப்புநிற சைக்கிளின் வருகைக்காக காத்திருப்பது பதின்மூன்று வயதுப் பிரமைகளின் நீட்சிதானே…வேறொன்றுமில்லை.
இலங்கையில் காணப்படுகின்ற மிகப்பெரிய அவமதிப்பு உண்மையாக உழைத்து ஊதியம் பெற விருப்பமில்லாமனநிலை. சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடுவதற்கு எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது. இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்றுஉபதேசித்தருளும் மனநிலையில் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். ஒற்றைத் துரும்பை தன்கையால் தூக்கிஅப்பால் போடுவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. தன் வீட்டு அழுக்குகளை வீதிவழியே வீசிவிட்டு தன்சட்டையில் பன்னீர் தெளித்துக் கொள்ளும் உயரியபோக்கு அதிகரித்திருக்கின்றது.
விமானம் கட்டுநாயக்காவில் தரையை தொட்டிருந்தது. கொழும்பு விமான நிலையத்தில் அதிகநோண்டுதல் இல்லாமல் வெளியே வரமுடிகின்றது. இழுத்தடிக்கும் பழைய தொழில்நுட்பம் வழக்கொழிந்து போய்விட்டிருந்தது. இன்னும் அரைமணிநேரத்தில் வத்தளையை அடைந்துவிடுவேன். வத்தளை பெருநகரமுமில்லா கிராமமும் இல்லாத வனப்பான நகரம். நான் இருக்கும் இடத்தில் இருந்து அருகாமையில் மிகநீண்டஅழகானகடற்கரை. மாலை நேரத்தில் பரபரப்பாகும் கடைத்தொகுதிகள்.
மழை சிணுசிணுங்க வத்தளையில் பத்து மணிக்கு வானில் ஏறினால் அதிகாலை நாலு மணி வாக்கில் கலகலவென நிலம் காய்ந்த சாவகச்சேரிப் பரப்பில் கால் வைக்கலாம்.சாவகச்சேரியில் போய் இறங்கிக் கொள்கின்ற தருணங்களில் எல்லாம் கேட்பதற்கும் பேசுவதற்கும் நிறைய விடயங்கள் இருக்கும். அதிகாலை இருட்டுக்குள் வீட்டின் முன்னால் இறங்கி இன்னும் விடிவதற்கு இரண்டு மணி நேரமிருக்கின்ற பொழுதில் பெரிய தாயார் தயாரித்து தந்த சூடான தேநீருக்கு பின்பாக சொன்னவைகள் எதிர் வீட்டை சுட்டி “புதிதாக கல்வயல் ஆட்கள் குடி வந்திருக்கினம்.எங்களுக்க துாரத்து சொந்தமாம்”.அந்த துாரம் எத்தனை கிலோ மீட்டர்கள் என்பதை அறிய ஆவலுற்றேன்.
ஒரு பரிசோதனைச்சாலையில் ஒரு தாய்குரங்கும், அதனது சேய்க்குரங்கும்- தாய்க்குரங்கின் உயரத்திற்கு சற்று மேலதிக உயரத்தைக் கொண்ட கண்ணாடி ஜாடிக்குள் விடப்பட்டன. ஜாடியினுள் கீழ் இருந்து நீர்செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. நீரினுள் தாய்க்குரங்கும், சேய்க்குரங்கும் விளையாடத் தொடங்கின. தங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே நீர் உள்ளே வருவதாக நினைத்துக் கொண்டன. நீர்மட்டம் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. தாய்க்குரங்கின் இடுப்பு மட்டம்வரை நீர் அதிகரித்து விட்டது. தாய்க்குரங்கு குட்டிக்குரங்கை தனது தோள்களில் ஏற்றிக்கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தது. வரப்போகும் ஆபத்தை உணரவில்லை. நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தாயக்குரங்கின் மூக்குமட்டம் வரை நீர் உயர்ந்து விட்டது. விளையாட்டை கைவிட்ட தாய்க்குரங்கு உயிராபத்தை உணரத்தொடங்கியது. குட்டிக்குரங்கை தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் கொண்டது. தாய்மையின் உன்னதத்தை வெளிப்படுத்தி குட்டிக்குரங்கை காப்பாற்றி நின்றது.
இரண்டாவது குரங்கு கதை “சங்கரன் பிள்ளையும் குரங்குகளும்” என்பதாக அமைகின்றது. சங்கரன்பிள்ளை இதுவரை வாழந்த வாழ்க்கையில் வெறுப்புற்று துறவி ஒருவரை நாடினார். தனக்கு மன அமைதி கிடைப்பதற்குரிய பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். துறவி சிறிது யோசனை செய்துவிட்டு சங்கரன்பிள்ளையிடம் கூறினார். இந்தப்பயிற்சி மிக இலகுவான பயிற்சி தான். நீ ஒரு வாரத்திற்கு எதைப்பற்றியும் பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக குரங்குகளைப் பற்றி நினைக்காமல் இருந்தால் போதும்.
ஆன்மீகத்தின்பால் உற்ற ஆவலினால் ஒருமுறை நுவரெலியா சென்றபோது காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றிருக்கின்றேன் அவரால் கற்றுத்தரப்படும் ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பு புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்ற எனக்கு அவரின் மறைவிற்கு பின்பு அடிபட்டுப் போயிற்று. அதன்பின்பு யோகாசன வகுப்புகளில் கலந்து கொண்டதனால் பெற்றுக்கொண்ட சிறிய சிறிய யோக அனுபவங்கள் ஆன்மீகத்தின் பக்கம் மேலும் இழுத்துச் சென்றன.
வாழ்வியல் அனுவபங்கள் பெரிதான பாடங்களை கற்றுத்தருகின்றன. ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதற்காக தரப்படும் விலைகள் மிக உச்சமானவை. வலி ஏற்படுத்தக் கூடியவை.
எல்லாவற்றிலும் அடிப்படையான சில விசயங்கள் யோகாசனம், பிராணயாமம், சில தியான முறைகள் என்பவையாக அமைந்திருந்தன.